Wednesday 25 June 2014

விவேகானந்தர் பாய்ச்சிய மின்னொளி


அக்டோபர் 2013-ல் விவேகானந்தம் வெப்சைட்டில் 
டாக்டர் அர. ஜெயசந்திரன் எழுதி வெளிவந்த கட்டுரை

http://vivekanandam150.com/?author=134

பிரம்மச்சரியம், பயிற்சி, மனஒருமைப்பாடு ஆகிய மூன்று விஷயங்கள் இதற்குத் தேவை. இந்த மூன்றும் வழுவாமல் பின்பற்றப்பட்டால் யார் வேண்டுமானாலும் நினைவாற்றல் திறமையைப் பெறலாம்.

- சுவாமி விவேகானந்தர்

விவேகானந்தரின் நூற்று ஐம்பதாவது ஆண்டு நினைவு விழாவை ஒட்டி இக்கட்டுரையை எழுதுகிறேன்.
பள்ளி கல்லூரிகளில் பயின்ற காலத்தில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகளை பல காலம் கேட்டதால் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 1990-ஆம் ஆண்டு கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்த பிறகு அவரது நூல்களைப் பிறர் படிக்கக் கேட்டேன்.
முதன்முறையாக விருதாசலம் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், அங்குள்ள வணிகவியல் துறையில் பாலகிருஷ்ணன் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை, அவர் நிகழ்த்திய உரைப்பகுதிகளை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக எனக்கு எடுத்துரைத்தார்.
விருதாசலத்தில் வாழ்ந்துவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் கண்ணப்பர் மகள் சிவகாமி என்பவர் ‘எழுமின் விழிமின்’ எனும் நூலினை நான் கேட்டுணருமாறு படித்து உதவினார். அதன் பிறகு எனக்குள் சில கருத்தோட்டங்கள் உதயமாயின. அவற்றுள் சில:
இந்து சமயம் ஆரியர்களால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டது அன்று;  அது அவர்களுக்கே உரிமை உடையதும் அன்று. ஆரிய- திராவிடப் பகைமை உண்மையற்றது. புத்த மதத்தாரின் இதயத் தூய்மையும், ஆரியர்களின் மூளைத் திறனும் இணைந்து செயல்பட்டால் பாரதம் உரிய வளர்ச்சியைப் பெறும்.
இறைவனை வணங்குவதற்கு மதமாற்றம் தேவையில்லை. இந்துக்களின் சமூக நோக்கமே அவர்களைக் காப்பாற்றும். பாரத நாட்டை அதன் பண்பாட்டுச் செழுமையே காக்கும் என்பனவாகும்.
விவேகானந்தருக்கு இருந்த படவழி நினைவாக்கம் (Photographic Memory) என்பது நமக்குத் தெரிந்த வரை வேறு யாருக்கும் கிட்டாத பேராற்றலாக விளங்கியுள்ளது.
இந்தியாவையும் அதன் மக்களையும் நேரடியாகக் கண்டு அவர்களின் நிலைமையை உணர்த்துவதற்காக விவேகானந்தர் இந்தியா முழுவதும் தன்னந்தனியாக சுற்றுப் பயணம் செய்தார். 1890-ல் மீரட்டிற்கு சென்றார்.  அங்கே தமது சகோதரத் துறவியர் சிலரை சந்திக்க நேர்ந்தது. அனைவருமாக சேட்ஜி என்பவர் வீட்டில் தங்கினர்.
சேட்ஜியின் வீட்டிற்கு அருகில் ஒரு நூல் நிலையம் இருந்தது. அங்கிருந்து விவேகானந்தருக்காக சகோதரத் துறவியரில் ஒருவரான அகண்டானந்தர் நூல்களை வாங்கி வருவது வழக்கம். ஒரு நாள் விவேகானந்தர் சர் ஜான் லுப்பக்கின் (Sir John Lubbock) இலக்கியத் தொகுதியை வாங்கி வரச் சொன்னார்.
அகண்டானந்தர் தினசரி ஒரு பகுதி கொண்டு வருவார். அதைப் படித்து விட்டு மறுநாளே அதைத் திருப்பிக் கொடுத்து விடுவார் விவேகானந்தர். நூலகருக்கு சந்தேகம் எழுந்தது; ஒரு பகுதியை ஒரே நாளில் படிப்பது என்பது சாத்தியமல்ல – விவேகானந்தர் படிக்கிறாரா அல்லது படிப்பது போல நடிக்கிறாரா? ஒரு நாள் அகண்டானந்தரிடமே அதைக் கேட்டார் நூலகர்.
இதைப் பற்றி கேள்விப்பட்ட விவேகானந்தர் நேராகச் சென்று நூலகரைச் சந்தித்தார். தாம் படித்தது மட்டுமல்ல, அந்த நூலில் இருந்து எந்தக் கேள்வியையும் எப்படி வேண்டுமானாலும் தம்மிடம் கேட்கலாம் என்றும் அவரிடம் தெரிவித்தார்.
நூலகரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு விவேகானந்தரைச் சோதித்தார். தயக்கமில்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார் அவர். இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று அகண்டானந்தர் பின்னர் விவேகானந்தரைக் கேட்டார். அதற்கு அவர், ‘எதையும் நான் ஒவ்வொரு வார்த்தையாகப் படிப்பதில்லை; ஒவ்வொரு வாக்கியமாக, சில வேளைகளில், பத்தி பத்தியாகப் படிப்பேன். அதனால் விரைவாகப் படிக்க முடிகிறது’ என்று கூறினார்.
கேத்ரி மன்னரும் விவேகானந்தர் படிக்கும் முறையைக் கண்டு வியந்ததுண்டு. அவர் புத்தகத்தைக் கையில் எடுத்து எல்லா பக்கங்களையும் ஒரு முறை புரட்டுவார். அவ்வளவு தான் – புத்தகத்தைப் படித்து முடித்திருப்பார்.
‘இது எப்படி சாத்தியம்?’ என்று மன்னர் கேட்ட போது விவேகானந்தர் விளக்கினார்:
‘ஒரு குழந்தை படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எழுத்துக்களை ஒவ்வொன்றாகப் படிக்கிறது. ஒவ்வோரு எழுத்தையும் ஓரிரு முறை உச்சரித்து, கடைசியாக வார்த்தையைப் படிக்கிறது. சற்றுப் பயிற்சி எடுத்த பிறகு ஒவ்வொரு எழுத்தாகப் படிக்காமல், வார்த்தை வார்தையாகப் படிக்கிறது.  இன்னும் பயிற்சி இருந்தால் வாக்கியம் வாக்கியமாகப் படிக்கலாம். இப்படியே மன ஒற்றுமை அதிகரிக்கும்  போது, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பக்கத்தைப் படித்து விடலாம். இதைத் தான் நான் செய்கிறேன்.
     பிரம்மச்சரியம், பயிற்சி, மனஒருமைப்பாடு ஆகிய மூன்று விஷயங்கள் இதற்குத் தேவை. இந்த மூன்றும் வழுவாமல் பின்பற்றப்பட்டால் யார் வேண்டுமானாலும் இந்தத் திறமையைப் பெறலாம். ’
     விவேகானந்தரின் இந்த ஃபோட்டோகிராஃபிக் மெமரி யாரையுமே வியப்பில் ஆழ்த்தும்; பிரமிக்க வைக்கும்.
அவர் உருவாக்கிய ராமகிருஷ்ண மடம் பார்வையற்றவர்கள் உள்பட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தொண்டாற்றும் நிறுவனமாக விளங்குவது நன்றியுடன் போற்றத்தக்கது. பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அணுத்திறல் வித்தாகவும், ஆணிவேராகவும் விளங்கினார். கண்ணபிரான் போன்ற அவதார மூர்த்திகளின் ஆற்றலை உணர்ந்து உயர்ந்து உயர்ந்து செல்ல வேண்டும் என்கிறார்.
இரண்டாயிரமாவது ஆண்டில் சென்னைக்கு மாற்றலாகி வந்த பிறகு கோவையில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயா பிரெய்ல் எனும் புள்ளி எழுத்து முறையில் வெளியிட்டுள்ள விவேகானந்தரின் ‘ஆளுமையும் வளர்ச்சியும்’ எனும் நூலை கைகளால் தொட்டுப் படித்தேன். அப்பொழுது நான் என் வாழ்க்கையில், படிப்பதன் மூலமாகவும் நமது உடலில் ஒருவித மின்சாரம் பாயும் என்பதை முதல் முதலாக உணர்ந்தேன்.
நூல் என்பது படிப்பவருக்கும், படிக்கப்படுபவருக்கும் இடையில் ஒரு ஊடகமாக இருப்பதை உணர்ந்தேன். ஒரு மனிதன் ஒரு புத்தகத்தை எடுக்கும் பொழுது அதற்கு உயிரூட்டுகிறான். அந்த நூலும் விவேகானந்தரைப் போன்றோரின் மின்னாற்றால் பாய்ச்சும் சொற்களை படிக்கும் போது நமது உடல், உள்ளம், உயிர், ஆன்மா எனும் அனைத்து நிலைகளிலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
2012 ஆம் ஆண்டு விவேகானந்தர் சிகாகோவில் ஆங்கிலத்தில் நிகழ்த்திய சொல் மழையை ஒலி வடிவில் கேட்டேன். அதைத் தொடர்ந்து புத்தம் புதிய மின்னொளி ஆற்றலைப் பெற்றேன்.
வள்ளலாரின் அன்பர்கள், வட இந்தியாவில் இருந்து ஒருவர் வந்து தமது கருத்துக்களை மேல்நாட்டாரும் அறியச் செய்வார் என்று கூறினார்கள். அவர்கள் விவேகானந்தரை மனதில் வைத்துக் கொண்டு தான் அப்படிச் சொன்னார்கள்.
விவேகானந்தர் பாரத நாட்டுக்காக மட்டும் பேசவில்லை. உலக மக்கள் அனைவரது நலனுக்காகவும் நல்லுரைகளை வழங்கினார்.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தரின் தியான மண்டபத்தில் இரண்டு முறை சென்று அமர்ந்து திரும்பினேன். அவர் என்னுள் பாய்ச்சிய மின்னொளி ஆற்றல் இன்றும் என்றும் உலக நலனுக்காக பணி செய்யும் பேராற்றலை எனக்குக் கொடுக்கிறது என்று உளமாற உண்மையைச் சொல்கிறேன்.

***

No comments:

Post a Comment